எனினும். தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லை யென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீளவும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே, மகாலிங்கையருடைய பிதாவாகிய கிழவர், "ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லோரும் வாயிற் புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அது தான் இவ் வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்" என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற் பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற்குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம்; வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்கு வர வழியில்லை. எனினும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற் பட்டது. ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளே யிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற் கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு க்ஷணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடி யலறிய பேரொலியும் அவள் செவியிற் பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக் கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின. |