பக்கம் எண் :

பூகம்பம்

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.

இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.

மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு இரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர் களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற்குச்சிலில் பிரஸவ வேதனையிலிருந்த மகாலிங்கையருடைய மனைவியும் இவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையு மிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும் மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவு பெற்றன. அரை மணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்றுவிட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை - அவள் பெயர் விசாலாட்சி - வெளியே வந்து பார்த்தாள். எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனித குடல்களும், மிருக, பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக்கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை.