சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியாக மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்போது சென்னப்பட்டணத்தில் 'சுதேசமித்திரன்' பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்கிரஸ்' என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதி நிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக் காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோதைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிஸம்பர் மாசத்திடையே ஒரு நாட் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புஸ்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின்மீது சாய்ந்துகொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முன்னே ஒரு சுமங்கிலிப் பெண் - அவருடைய இளைய மகள் - ஒரு பிரம்மாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள். "இதில் என்னம்மா, வைத்திருக்கிறது?" என்று அய்யர் கேட்டார். "நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது" என்று மகள் சொன்னாள். "இதையெல்லாம் எப்படிச் சுமந்துகொண்டு போகப்போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டுமுண்டம்" என்று அய்யர் முணுமுணுத்தார். |