பக்கம் எண் :

விசாலாக்ஷியின் ஏமாற்றம்

இவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாட்சியை நோக்கி, "அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையலறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபாலய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக் கொண்டு வந்த வெங்காயமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, மைசூர் ரஸம், புடலங்காய் பொடித்தூவல், வடை, பாயஸம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறைய பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி, நீ காலையில் ஸ்நானம் பண்ணிவிட்டுத் தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா" என்றாள்.

விசாலாட்சி "அப்படியே சரி" என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்து பட்சிகளின் விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரஸித்துக் கொண்டிருந்தனர்.

குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனிலும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.