'ஹார்மோனியம் இருக்கிறது' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்தலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய 'மோஹின்' பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாக்ஷியிடம் கொடுத்தாள். பெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற் கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த "மாருபல்கு கொன்னா லேமிரா" (மறுமொழி சொல்லாதிருப்ப தென்னடா?) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள். அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டுவந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் மேற்படி கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி "மாரு பல்க" என்ற பல்லவி யெடுக்குந் தறுவாயிலிருந்தாள். வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள். "என்ன விசேஷம்? யார் வந்திருக்கிறார்கள்?" என்று பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள். "கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக்கொண்டு, மட மட வென்று வெளியே சென்றார். |