பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல்; செய்ய குங்குமப்பொட்டு; அந்தக் குழந்தை விசாலாக்ஷியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது ஸரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லக்ஷ்மீதேவி விக்ரமாக விளங்கிற்று. அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவ ஸ்திரீகளின் நாட்டியச் செயல்களை யொத்திருந்தன. இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப் பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக் கண்ணுக்கு முன்னே எழுந்தது. "குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "தெரியும்" என்றாள் சந்திரிகை. "எங்கே, ஒன்று பாடு. கேட்போம்" என்றார் கோபாலய்யங்கார். "அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?" என்று சந்திரிகை கேட்டாள். "பாடு" என்றார் கோபாலய்யங்கார். சந்திர்கை பாடத் தொடங்கினாள்: |