யதுகுல காம்போதி ராகம் - ஆதி தாளம் ஸஸ்ஸாஸா - ஸம்மாபதா - பததபபமபா - பாபா பநீஸதபா - மாகா - ஸரிமகரீ - கெகரிரிஸஸா. பார்க்கு மரத்திலெல்லாம், நந்தலாலா - நின்றன் பச்சை நிறந்தோன்று தடா, நந்தலாலா; காக்கைச் சிறகினிலே, நந்தலாலா - நின்றன் கரியவிழி, தோன்றுதடா, நந்தலாலா; கேட்கு மொலியி லெல்லாம், நந்தலாலா - நின்றன் கீத மிசைக்கு தடா, நந்தலாலா; தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா - நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா. இந்தப் பாட்டை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டுதரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டு விடத் தெரிந்தது. அவர் தன்னுடைய ஜன்மத்தில் இவ்வித சங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை. "இதுதான் சுவர்க்கம்" என்று கோபாலய்யங்கார் சொன்னார். "எது?" என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். "இந்தக் குழந்தையின் பாட்டு" என்று அய்யங்கார் சொன்னார். "சங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?" என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். |