அதற்குக் கோபாலய்யங்கார்-"மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்விகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்" என்றார். "குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக் கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்" என்று பந்துலு சொன்னார். "அவையும் சேர்ந்துதான்" என்று அய்யங்கார் சொன்னார். இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக் குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப்போய் விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்று விட்டாள். அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி, "இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா?" என்று கேட்டார். பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார். "என் ஜன்மம் பலிதமாய் விட்டது" என்றார் கோபாலய்யங்கார். "அதெப்படி?" என்று பந்துலு கேட்டார். "இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது" என்றார் அய்யங்கார். |