பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகல வென்று நகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று அய்யங்கார் கேட்டார்.

"விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். சாதாரணமாக, ஹிந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் சந்தித்து சம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய சம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் சம்மத முணர்த்துவாளாயின் பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்" என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார் "அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமு மில்லை" என்றார்.

"அப்படியே செய்யுங்கள்" என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

கோபாலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நித்திரை போய்விட்டார்.