கோபாலய்யங்கார் தூங்கிக்கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதர் இருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறு சுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத்தேர்ச்சி பெற்றவள். நமது விசாலாட்சியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிக தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், "பிராமணா: போஜனப்ரியா;" (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுசரிப்பதில் சாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர். பிராமணர்களைக் குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். 'பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோகம் அதிகம்' என்று மற்ற ஜாதியார் சாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில சமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறைபோலப் பேசிக்கொள்ளுகிறார்கள். சில சமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ் வசனத்தைக் கையாள்கிறார்கள். வேறு சில சமயங்களில் மற்ற ஜாதியிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். "ஸர்வேஜநா: போஜனப்பிரியா:" எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் சாதாரண பிராமண னொருவனைக் காட்டிலும் சாதாரண சூத்திரன் - மறவன், அல்லது இடையன், அல்லது உழவன், எந்தத் தொழிலாளியும் - நாளொன்றுக்குக் குறைந்த பக்ஷம் மூன்று மடங்கு அதிகமாகத் தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மனியன் இருபத்தேழு பங்கு அதிகமாகத் தின்கிறான். இனி, அளவை விட்டுவிட்டு, ஆகாரத்தின் பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர், |