பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

போஜனப் பிரியர் என்று சொல்லத் தகார். அன்னத் துவேஷமுடையோரை போஜனப் பிரியர் என்று கூறுவதெப்படி? இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனிலும், போஜனம் பண்ணுவதில் எல்லோரும் விருப்புடையோரே யெனிலும், போஜன விஷயத்தைக் குறித்து நீண்ட ப்ரஸ்தாபம் நடத்துவதில் தற்காலத்துப் படிப்பு படித்தவர்களுக்கு அதிகச் சுவையேற்படாதாகையாலும், இந்நூல் படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசி யேற்படாமல் கதையெழுத வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்குச் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப் பிரியர் என்று கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியினின்றும் வேறுபட்ட குணமுடையோ ரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லை யென்பதே என் அபிப்பிராயம். இது நிற்க.

கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமசேனனுக்கு 'விருகோதரன்' ஓநாய் வயிறுடையோன் - என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்குப் பசி அதிகமாம். தின்னத் தின்ன - எவ்வளவு தின்றபோதிலும் - சாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம். உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது சிறிதேனுமில்லாமலும் உழைத்தால், மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில் வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழுவலிமையையும் செலுத்திச் செய்யப்படும் தொழிலே தொழிலாம். ஆனால், எவ்வளவு தொழில் செய்த போதிலும், அதை எத்தனை வலிமையுடனும் செய்தபோதிலும், அதனால் உடம்புக்குச் சிரம முண்டாகாதவண்ணமாகச் செய்யவேண்டும். வேர்க்க வேர்க்க கஸ்ரத் எடுப்பவன் சமர்த்தனல்லன். எத்தனை கஸ்ரத் எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே சமர்த்தன்.