பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

இதை ஒரு வேளை சாதாரண மல்லர் அங்கீகாரம் செய்யத் திகைக்கக் கூடும். ஆனால் நூறு கஸ்ரத் பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டிப் போகும் மனிதனைக் காட்டிலும், ஆயிரம் கஸ்ரத் செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக சமர்த்தன், அதிக பலவான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இந்தக் கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம் எட்டிப் போடுகிறேன். கஸ்ரத் செய்யும் தொழிலாயினும் கதை யெழுதும் தொழிலாயினும் - எல்லா விதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிரமன்தோன்றின பிறகுதான் உடம்பில் சிரமந்தோன்றுகிறது. அசைக்கமுடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிரமமுந் தோன்றாது; அது உன்னதமான வெற்றி பெறவுஞ் செய்யும். இங்ஙனம் தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி, உடம்பில் மேன்மேலும் ஒளியும் வலியும் விருத்தி யடைந்துகொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கலாமென்னில், கோபாலய்யங்காருக்குப் பத்துப் பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர். எனவே மதுமாம்சப் பழக்கங்களால், வீரேசலிங்கம் பந்துலு எதிர் பார்த்தபடி, கோபாலய்யங்கார் அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர் பார்க்க இடமில்லை. இது நிற்க.

கோபாலய்யங்கார் போஜன பிரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே, விசாலாட்சியின் விழிகளென்னும் வலைக்குள் கோபாலய்யங்காரின் ஹிருதய மென்ற மானை வீழ்த்துவதற்கு இரைபோடும் அம்சத்தில் கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரை என்று தீர்மானித்துக் கொண்டு, வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாகலமாகச் சமையல் பண்ணினாள். முப்பது வகை கறி; முப்பது வகைச் சட்டினி; முப்பது வகை பொரியல் - எல்லாம் பசு நெய்யில்,