"மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்குக் காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்தப் பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறிய போதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்தியவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துவுக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்த போதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல்தான் அந்தப் பணிப் பெண்மீது கொண்டிருக்கிறேன்" என்று அய்யங்கார் சொன்னார். செவிடன் காதில் சங்கூதுவதுபோல் வீரேசலிங்கம் பந்துலு பல பல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக்கொண்டிருக்கும் போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கிவிட்டார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதனை யுணர்ந்து பந்துலு - "சரி, இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்" என்றார். அப்போது கோபாலய்யங்கார் - "அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப் பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பெற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு வீரேசலிங்கம் பந்துலு - "அப்பணிப் பெண்ணுக்குப் பெயர் மீனாக்ஷி. அவள் ஜாதியில் இடைச்சி. |