பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது. ஓஹோ ஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒரு வேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?" என்றார்.

"அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாகக் கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை" என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

"தாலி ஒருவேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருக்கலாம்" என்றார் பந்துலு.

"அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லை யென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ் விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்திரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்" என்று கோபாலய்யங்கார் வேண்டினார்.

"எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று.