பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசல நாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமசமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமசிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜமகேந்திரபுரத்துக்குப் போகும்போது அப் பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்" என்று பந்துலு சொன்னார்.

"நாளைக்குக் காலையில் நான் மேற்படி வேங்கடாசல நாயுடுவைப் பார்க்க வேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போக வேண்டாம். எனினும், இந்தப் பணிப் பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது" என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

இது கேட்டு கோபாலய்யங்கார்:- "எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்குத் தருவியுங்கள். மற்ற சங்கதி பிறகு பேசிக் கொள்வோம்" என்றார்.