அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த சம்பாஷணையைத் தமது மனைவியிடந் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியை யெல்லாம் விசாலாக்ஷியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாக்ஷி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, "இது போனால் போகட்டும், வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது" என்றாள். அப்போது பந்துலுவின் மனைவி:- "பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ் செய்து வைக்கிறேன்" என்றாள் |