பக்கம் எண் :

சந்திரிகையின் கதை - கோபாலய்யங்காருக்கு விவாகம்

மறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார்.

நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாக்ஷியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாக்ஷியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர் குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களைச் சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டுபிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத் தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு 'தர்மசங்கடம் சங்கரய்யர்' என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அநேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கக்ஷி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப் படுவாராம். 'நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக'