பக்கம் எண் :

சந்திரிகையின் கதை - கோபாலய்யங்காருக்கு விவாகம்

என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, "வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கக்ஷி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கக்ஷி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தக் கட்சிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?" என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்குத் "தர்மசங்கடம் சங்கரய்யர்" என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குகளின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன்.

அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத் தெளிவு முடையோரே எதிலும் பக்ஷபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
       மெய்போலும்மே; மெய்போலும்மே
       மெய்யுடை யொருவன் சொல்லமாட்டாமையால்
       பொய்போலும்மே பொய்போலும்மே."

இங்ஙனம் சொல்வலிமை மட்டுமே யன்றி, ஆள் வலிமை, தோள்வலிமை, பொருள் வலிமை - எல்லாவித வலிமைகளும் நியாயத் தராசைத் தமது சார்பாக இழுத்துக்கொள்ளவல்லன.