பக்கம் எண் :

சந்திரிகையின் கதை - கோபாலய்யங்காருக்கு விவாகம்

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும், தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக்கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பணிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரித்தார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய பிதா பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய் விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும் அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக்கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன வென்றும், வீடுவாயில் பெருக்குதல், பாத்திரங் கழுவுதல், துணி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி, பொறுமை, இன்சொல், பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்றும், அவளுக்கு மாசம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லை யென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.