1907 ஆம் வருஷம் - அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால் - மே மாசத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார். "காபி போட்டுக்கொண்டு வரலாமா?" என்று முத்தம்மா கேட்டாள். "எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி யிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக்கொண்டு வந்து குடித்துக்கொள்" என்றார் சோமநாதய்யர். |