"எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னைக் கண்டால் போதும்; உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. 'இன்றைக்கு என் உடம்பு சௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை' என்று உங்கள் வாயினாலே சொல்ல ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒருதரமேனும் காது குளிரக் கேட்கப்போகிறேனோ, அல்லது கேட்காமல் பிராணனை விடப் போறேனோ தெரியாது. கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி, அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம் - எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய் விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டாம். இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்" என்றாள். சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்து விட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். "நன்றி கெட்ட நாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும்பாடு `பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?' நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக் கொண்டே யிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் சம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மனவருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தை யெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப் போயிருக்கிறது. |