இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது? பேதைச் சொற்கள், மடச் சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச் சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள் - இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல் 'புடவை வேண்டும்,' 'ரவிக்கை வேண்டும்,' 'நகை வேண்டும்.' 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்' - வீண் செலவு! வீண் செலவு! வீண் செலவு! என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தை யெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் போகிறதோ?" என்று சொல்லி சோமநாதய்யர் அழத்தொடங்கி விட்டார். அப்போது முத்தம்மா:- "அழுகையை யெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை, சந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைத் தள்ளி விட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம் செய்து கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இன்னொரு புதுப்பெண் - சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டு அவளுடன் இன்புற்று வாழத் தொடங்கு வீர்களாயின் உங்களுக்குள்ள மனக் கவலை யெல்லாம் நீங்கிப் போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப்போய் விடும். நீங்கள் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள். |