பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படிச்சொல்ல மாட்டாள். அவளும் உங்கள்போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக் கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந் தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாட்சியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக் குறைவுகளெல்லாம் நீங்கிப் போய் விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது" என்றாள்.

இது கேட்டு சோமநாதய்யர்:- உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும் ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்துகொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ரக்ஷணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும். உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித் தள்ளி வைப்பேன். பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது வியபசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா? அப்படியே ஏதேனு மொரு முகாந்திரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப் பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளி வைத்துவிட்டு வேறு விவாகம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக்கொள்ளும்படி,