எனிலும், வருந்தினால் வாராத தொன்றுமில்லை. மனித ஹிருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமையிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும், தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம், இதைப் பற்றியே சோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய் மரவுரியுடுத்து கந்த மூலங்களைப் புசித்துக் கொண்டு செய்யும் தவத்தை இங்கு பேசவில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை - அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்; எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை - ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மை யெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக்கொண்டொழுக வேண்டிய சாதனங்களில் மிக உயர்ந்தது தவம். அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்திரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம், பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் தவமென்றே கூறப்படும். எல்லாப் பாவங்களைக் காட்டிலும் வலியது, மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது, பயம். எனவே, பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்ற பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏககாலத்தில் முயன்று பழகுதல் வேண்டும். |