பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும் பாலும், இப் பாவத்தை அவர் மானஸிகமாகச் செய்து வந்தவரே யல்லாமல் காரியாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:- "அன்ய ஸ்திரீகளுடன் சம்பந்தப்படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன்மனைவி யொழிய மற்றொரு ஸ்திரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட் பட்டவனே யாவான்" என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் சாதாரணமாகக் கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க் காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனை யடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரகள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம்; முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித ஹிருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித ஹிருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பதுபோல் ஒரேயடியாக அசாத்யமன்று; ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் "இளமையிற் கல்" என்று உபதேசம் புரிந்தனர்.