எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று செலுத்தும் கருணைகள் சாலமிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர். அவ் விருவருள் தாயே நம்மிடத்தே அதிக தெய்விகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப் படத்தக்கவள். இதனைக் கருதியே "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சோமநாதய்யர் காமம், குரோதம் முதலிய சேஷ்டைகளை உடனே அடக்கிக் கொள்ளக் கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காமம் முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்குசுடர் வீசும் சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலாக்ஷியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பரஸ்திரீகளின் விஷயத்தில் அதிகமாகப் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். "பாவத்தின் கூலியே மரணம்" என்ற கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டுவிட வேண்டும். ஒருயாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சி யுண்டாய் விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் இதம்பண்ணும் சக்திகள். |