இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப் போட்டு வைத்துக் கொள். குழந்தாய், சோமு, அந்தப் பராசக்தி லலிதாம்பிகைதான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் சந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்" என்றாள். அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. "அத்தை யருமை செத்தால் தெரியும்" என்பது பழமொழி. ராமு பாட்டியின் முதுமைக் காலத்தில், சோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய ஹிம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்றுவரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரேயடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தை யெல்லாம் படைத்துக் காப்பவளாகிய சாக்ஷாத் ஜகன் மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். "புருஷ ஏவேதம் ஸர்வம்" என்று வேதம் சொல்லுகிறது. இவ் வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" - உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். வேலையாளாக வந்து வீட்டைப் பெருக்குவதும் கடவுள்தான் செய்கிறார். தோழனாகவும் பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாகவும், தாய் தந்தையராகவும், பெண்டு பிள்ளைகளாகவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். |