பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

உடம்பிலும் உயிரிலும் பாதியென்று அக்நியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மனைவியாயினும், அவள்மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாசங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்துபோய் விட்டாள். அவள் சாகு முன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்:-

"அடே, அய்யா, சோமு! உன் பெண்டாட்டி முத்தம்மாளை நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகாபதிவிரதை. உன்னை சாக்ஷாத் பகவானுக்குச் சமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும்போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய் விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும்படியாக நடப்பவன் வீட்டில் லக்ஷ்மீ தேவி கால்வைக்கமாட்டாள். அந்த வீட்டில் மூதேவிதான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள்.