அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒரு வேளை தன்னை மீறிக் கோபம் வந்த போதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன்மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத்தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக்கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக் கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில் - அனேக சமயங்களில் - நமக்குப் பயனற்றனவாகவும், கழிபெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக்கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முட் பலர் அம்மாதர்களை மகா மடமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம் நினைத்தல் நமது மடமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீரபலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப்பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை. ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விகக் குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே, அவள் தாயாயினும், |