வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை யேற்படாது. பொறுமை எவ்வளவுக் கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக் கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமை யேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் சிறு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடுநேரம் மிகமிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிகமிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இதுபோலவே சுக துக்கங்களைச் சகித்துக்கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்கமுடியாத பேதமைச் சொற்களும் சொல்லி சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்ப மெய்தும். இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். |