இலேசான சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத் திட்பமில்லாதோருக்கு நாடித் திட்ப மிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமை யற்றனவாகின்றன. மனவுறுதி யில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் ஏதேனும் குழந்தைக் குரல் கேட்டால் போதும். உடனே இவனுடைய கணக்கு வேலை நின்று போய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவருடைய கணக்கு மாத்திரமே யன்றி சுவாஸமோ ஏறக்குறைய நின்றுபோகக்ிலைமை எய்தி விடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்குச் சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராசபாணம் புகுந்தது போல பேரிடர்ப்படுவான். பொறுமை யில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமே யன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காணமாட்டான். ஒருவனுக்கு எத்தனைக் கெத்தனை பொறுமை மிகுதிப் படுகிறதோ, அத்தனைக் கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இதுபற்றியே யன்றோ நம் முன்னோர் "பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்" என்று அருமையான பழமொழி யேற்படுத்தினர். இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக்கொண்டே யிருக்கிறார்கள். கோபம் பிறக்கத்தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். |