பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

"வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
       வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்."

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமை யுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண்மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்குச் சக்தியும் வலிமையும் மிகுதிப் படவேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.

அவ்வலிவையும் சக்தியையும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சார்ந்த ஆண்மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையையே சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும் அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம்போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்த வேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்பமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிதறக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச் சொல் கேட்கும்போதும்,