பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

"அடியே, நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே. உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா? சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது! இவள் வாயை அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்ய மாட்டாயா, ஈசா?" என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார்.

"சரி. போதும், போதும். காது குளிர்ந்துபோய் விட்டது. என்னைக் காபி குடித்துவிட்டு மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?" என்று முத்தம்மா மீண்டுமொரு முறை வினவினாள்.

"காபி குடித்துவிட்டு வா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத் தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?" என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.

"சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு" என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தைப் பிரயோகம் செய்துவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.

அவள் போனவுடன் சோமநாதய்யர்:- "ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும் கிடைக்க வில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!" என்று நினைத்து வருந்தினார்.