பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்ட வேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரமமூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதிவருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமை யென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்குச் சாசுவதமான ஞானமும் நித்திய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்டபோதிலும் தீங்கில்லை யென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்டாமல் முள்ளை யெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின்,