ரதிதேவி, ஆ!! என்று கதறி நிற்பதுபோல எழுதியிருந்தது. அவள் முகத்தில் - உடல் முற்றிலும் - காணப்பட்ட சோகத்தையும் பரிதாபத்தையும் என்னால் வருணிக்க முடியாது. கந்தர்வச் சிற்பனுடைய சித்திர சலாகை எங்கே? எனது பேதையெழுதுகோ லெங்கே? எத்தனைக் கெத்தனை! மற்றொரு பாரிசத்தில், சிவனுக்கும் விவாகம் முடிந்து பார்வதி பாகனாக விளங்குகிறார். ரதிதேவி வந்து வணங்கி நிற்கின்றாள். சிவன் புன்னகை பூத்து அருள் புரிய, மதனன் சாம்பலிலிருந்து மீண்டும் உயிருடன் எழுந்து சிவனையும் பார்வதியையும் முடியால் வணங்கிக்கொண்டு கையினால் அவ்விருவரின் மீதும் அம்புகள் தொடுக்கின்றான். பார்வதி ஐயனைத் தழுவிக்கொள்ளுகின்றாள். இவ்வாறு மதனன் கோயிலிலே இருக்கும் ஒவ்வொரு காட்சியின் முன்னேயும் கந்தர்வ ஜனங்கள் வந்து பலவாறாகத் தொழுது கொண்டிருந்தனர். சில ஸ்திரீகள் கையில் யாழ் வைத்துக்கொண்டு பாடினர். ஒரு பக்கத்தில் வாலிபரும் மாதர்களும் இணையிணையாகப் பலவிதக் கூத்துக்களாடி ஓர் வளையமாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். |