பாடுகின்ற குயில்கள், மலர் புனைந்த மரங்கள், வாவி, கூடி விளையாடும் மான்கள், வண்டுகள் முதலாகத் தென்றல் கொண்டு வரும் மெல்லிய மகரந்தத்தூள் வரை, வஸந்த காலத்தின் காட்சிகளெல்லாம் உண்மையினும் உண்மையாகத் தோன்றின. அங்கு, தேவதாரு மரங்களால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய மண்டபத்தில் சூரிய காந்தக் கல் மேடையில் உட்கார்ந்து, சித்தத்தை யடக்கிய நிலையில் நிறுத்தி, முக்கண்களின் பார்வைகளையும் மூக்கின் நுனியிலே செலுத்தி அலையோய்ந்த சமுத்திரம் போல அசைவற்றிருந்த சிவபெருமானின் உருவப் பதுமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிரே, தவத்தால் மெலிந்த சௌந்தரிய தேவதை வந்து நிற்பது போல, தவவேடங் கொண்ட பார்வதிதேவி நின்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் பக்கத்திலே மதனன் தனது கரும்பு வில்லில் நாணேற்றிப் புஷ்ப பாணந் தொடுத்துக் காத்து நிற்பதுபோல ஓர் உருவம் நின்றது. மற்றொரு பாரிசத்திலே, மன்மத தகனம் சித்திரித்துக் காட்டப்பட்டிருந்தது. பின்புறமாகத் திரும்பி, சத்திய தேவதை கொடுங் கோபத்தில் நிற்பது போலப் பரமசிவன் முகத்திலே கோபத்தழல் பொங்க நிற்பதும், அவனது நெற்றியிலுள்ள 'ஞான' விழியினின்றும் தீ வெள்ளமாகப் பாய்ந்து மன்மதனுடைய உருவில் நெருப்புப் பற்றி எரியும் காட்சியும் எழுதியிருந்ததைப் பார்த்து என் மனதிலே நடுக்கமுண்டாயிற்று. பர்வதகுமாரியின் கையோடு கோத்திருந்த எனது கையைப் படீரென்று பிடுங்கிக் கொண்டேன். பர்வதகுமாரி கடகடவென்று நகைத்து, "சித்திரத்துக்கு அஞ்சுகிறாய்!" என்றாள். அது வெறுஞ் சித்திரந்தான் என்று என் மனதில் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. கோயிலிடையில் மதன வடிவத்தில் அருகே ரதி யுருவம் காணாவிடினும், இங்கே அவனது எரியும் உடலருகே |