ஒவ்வொரு காட்சியைப் பற்றி எழுதும்பொழுதும், 'வியப்புற்றேன்', 'வியப்புற்றேன்' என்று ஒரே வண்ணமாக மீட்டும் மீட்டும் சொல்லி எனக்கு அலுத்துப் போய்விட்டது. கந்தர்வ நாடே வியப்பு நாடு. "மன்மதனுடைய பிம்பத்துக்கருகே ரதி பிம்பத்தைக் காணோமே?" என்று கேட்டேன். "அது கந்தர்வலோக ரகஸ்யம். உன்னிடத்தில் சொல்லக் கூடாது" என்றாள். "நானும் தற்காலத்திற்கு கந்தர்வனென்பதை நீ மறந்து விடுகிறாய்!" "அப்படியானால், நீ யோசனை செய்யும் விஷயத்தில் உனக்கே விளங்கும். அது போகட்டும். சற்றுக் கீழே யிறங்கி நான்றாக எல்லாவற்றையும் பார்ப்போம், வா. இங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதை விட அங்கே போய்ப் பார்ப்பது நலம்" என்றாள். சற்றுக் கீழேயிறங்கி அத்திருவிழாவின் வினோதங்களையெல்லாம் பார்த்தோம். இப்புறம், மன்மத விக்கிரகத்துக்குப் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன; அப்புறத்திலே மன்மதன் தகன கதை, அவன் திரும்பவும் உயிர்த்தெழுந்த பருவம் வரை, பிரதிமைக் காட்சிகளாலும், சித்திரக் காட்சிகளாலும் நன்கு விளக்கப்பட்டிருந்தது. வஸந்த காலம் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். யதார்த்தத்திலேயே கந்தர்வ நாட்டில் அப்போது வஸந்த காலம். அதுபற்றியே காமன் திருவிழாக் கொண்டாடினார்கள். எனவே, கந்தர்வச் சிற்பர்களின் அற்புதத் தொழிலுக்குப் பிரகிருதி தேவியும் துணைபுரிவாளாயினள். |