பக்கம் எண் :

மதனன் விழா

"உனது ரூபம் சிறிது காலத்திற்கு கந்தர்வ ரூபமாக மாறியிருந்த போதிலும், ஜன்மம் மாறவில்லை என்பதை அறி" என்றனள் குமாரி.

"அது போகட்டும், இப்படிப் பிரதிமைகள் உங்கள் நாட்டிலே அதிகமாக உண்டோ?" என்றேன்.

"நாளைக்கு உன்னை அமிர்த அருவிக்கு அருகேயுள்ள சித்திரசாலைக்கு அழைத்துச் செல்லுகிறேன். அப்போது எல்லாம் பார்க்கலாம்" என்றனள்.

இப்படிக் குமாரியுடன் பேசிக்கொண்டிருந்த நேரமெல்லாம் எனது விழிகள் கீழே தோன்றிய மன்மத விக்கிரகத்தினின்றும் அகலவில்லை.

"உங்கள் நாட்டுச் சிற்பிகளுக்கு இத்தனை சிற்பத் திறமை இருந்தபோதிலும் அநங்கனுக்கு உருவம் ஏற்படுத்தலாகாது என்பது தெரியவில்லை. இஃதோர் விந்தையே" என்றேன்.

"சபாஷ்! மனித நாட்டிலிருந்து வந்து, கந்தர்வத் தொழிலுக்குப் பிழை கூறத் தொடங்கிவிட்டாய்! எங்கள் நாட்டுக்குள்ளே இதைப்போன்ற பெருமைகொண்ட பிரதிமை வேறே கிடையாது. கொஞ்சம் உற்றுப் பார். எவ்வளவு உற்றுப் பார்த்தபோதிலும் உனக்கு அப் பிரதிமையைப் பற்றிய உண்மை சொன்னாலொழியத் தெரியாது."

அந்தப் பிரதிமை மண்ணாலேனும் பளிங்காலேனும் செய்யப்பட்டதன்று. மனோமய மாகிய நுண்வான் (ஸூக்ஷ்ம ஆகாசம்) கொண்டு செய்யப்பட்டது. மனதிலே பிறந்த காமதேவனுடைய உண்மை உருவம் இதுவே. இதைச் செய்த மயனை நாங்கள் த்விதீயப் பிரம்மா (இரண்டாம் பிரம்மா) என்று சொல்வதுண்டு. பிரம்மாவால் செய்யப்பட்ட காமதேவன் ஜீவஸஹிதனாக இருக்கிறான். இப் பதுமைக்கு உண்மையுயிர் இல்லாவிடினும் கலையுயிர் (சைத்திரிக ஜீவன்) கொடுக்கப்பட்டிருக்கின்றது" என்றனள்.