போனபிறகு இறங்கிக் கொள்வார்கள். இத்தனை பெரிய கூட்டம் இத்தனை மனோகரமாயிருந்ததைப் பார்த்து எனக்குண்டான வியப்பு கொஞ்சமில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக்கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும், சில சமயங்கள் மிக வணக்கத்துடன் நமஸ்கரித்துச் செல்வதும், சிரித்துப் பேசுவதும் - என்ன அன்பு! என்ன மரியாதை! என்னால் வருணிக்குந்தரமன்று. "பர்வதகுமாரி, அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன். "மாட நிலத்தினிடையே ஒரு மண்டபந் தெரிகிறது பார்." "ஆம்." "அங்கே கிளி வாகனத்தின்மீது என்ன வைத்திருக்கிறது?" "மன்மத விக்கிரகம்." "அவருடைய திருவிழா" என்றாள். அந்த மன்மத விக்கிரகத்தைக் கண்டவுடனே நான் ஸ்தம்பித்தவனாய் விட்டேன். "குமாரி, இது யாரால் செய்யப்பட்ட பிரதிமை?" என்றேன். "எங்கள் நாட்டுச் சிற்பிகளால்" என்றனள். எனக்குத் திடீரென்று பாரத நாட்டிலே சிலைத்தொழில் இப்போது சீர்குன்றி நாசமடைந்து போயிருக்கும் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. "அடடா! கந்தர்வ நாட்டிற்கு வந்தும் அந்தக் கஷ்ட தேசத்தினுடைய ஞாபகம் மறக்கவில்லை" என்று வாய்விட்டுக் கூறினேன். |