பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

அதில் ஐயப்படுவது மூடத்தனம். 'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ? நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மை யொன்றைப் பற்றி வீண் சம்சயம் படும் அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதை தான். நம்முடைய உண்மையைச் சோதித்தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத்தழல் அவிந்து போக இடங் கொடுக்கக் கூடாது. இதனால் நாம் அவளிடம் விரஸப்படலாகாது. அவள் தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக் காலத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்திய விளக்கன்றோ இந்தக் கண்மணி முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள் செய்கிறாள்? ஊடல்தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது?

உணவினும் உண்டதற லினிது; காமம்
       புணர்தலின் ஊட லினிது

என்றன்றோ சாக்ஷாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மகா கவியுமாகிய திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில் ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற் படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே! இவளைக் காதல் ராணி யென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர்,