பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக் கிழப் பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின் அஃதோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப் பெண்டாட்டி யென்றால் அவள் தன் விருப்பத்துக்குக் கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதிய தொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல் கொள்வது போல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக் கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதை யல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதை யென்று சொல்லி விட்டு மடிந்தாளே. அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம் சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும், அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்றுக் கவனித்தேனன்றோ? அவள் அச் சொல்லைப் பரிசுத்தமான ஹிருதயத்துடனும் உண்மையான நம்பிக்கையுடனும் கூறினாளென்பது அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப் புகுவோமாயின், அது பெரு மடமைக்கு லக்ஷணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்து மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்த வளன்றோ? மேலும் என் மாதா புத்திக் கூர்மை யில்லாத மந்தமா? இருபது கம்பிளியைப் போட்டு ஒரு ரகஸ்யத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத் தெரிந்துவிடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை.