ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும் இருந்த படியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத் தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்துப் பழகினார். எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக் கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கும் அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். "இவளை நாம் காதலுக்கு யோக்கியதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புக்களும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதல் ராணியாகக் கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது, வெங்காயமாவது! நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ, என்னவோ? எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய ஹிருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல் எளிது; மாதர் மனத்தை ஆழங்காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிக காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. |