பக்கம் எண் :

அந்தரடிச்சான் சாஹிப் கதை

பஸ்ஸ்ஸ்ஸ் நீ யன்றோ இந்த நிலைமையே குடும்பத்தைக் கொண்டுவந்து விட்டாய். ஒய்யோம்! ப்யோம்! ப்யோம். நம்கீ ரொட்டி ஜாஸ்தி, மீன் இல்லை. சாப்பாட்டுக்குக் கஷ்டம்! பாலா, மணிலாக் கொட்டை வாங்கிக் கொடு" என்றான்.

அப்போது அந்தரடிச்சான் சொல்லுகிறான்:-

"கியாரே? நம்கீ ரொட்டி இல்லை. நீ மீனில்லையென்று நம்மிடத்திலே கோபிக்கிறாயே? அந்தக் கிழ மூர்ச்சே போட்டான் சாஹிப் இருக்கிறார். அவராலே வீட்டுக்கு ஒரு தம்படி வருமானம் கிடையாது. ஹாம்; என்ன சொன்னாயடா! நானா சூதாடினேன்? என்னையாடா சொன்னாய்?" என்று கேட்டான்; உடனே முந்நூறு பல்டியடித்துச் செத்தான் சாஹிப் மேலே விழுந்தான்.

இப்படி இருக்கையில் அந்த ஊர் பாத்ஷாவுக்குப் பிறந்த நாள் பண்டிகை வந்தது. பெரிய கூட்டம். தோரணங்கள்; டால்கள்; பந்தர்கள்; மாலைகள்; விளக்கு வரிசைகள்; புலி வேஷங்கள்; பெரிய பெரிய வஸ்தாதுகள் வந்து குஸ்திச் சண்டைகள்; அதிர் வெடி ஜமா!

அதுக்கு நடுவே அந்தரடிச்சான் சாஹிப் போய் நுழைந்தான். இத்தனை ஜமாவையும் பாத்ஷா ஏழாம் உப்பரிகையின் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் கத்திச்சண்டை நடந்து கொண்டிருந்தது.

காலை ஏழு மணி முதல் பகல் பத்து மணி வரையில் மூன்று மணி நேரமாக ஒரு க்ஷணம்கூட சிரம பரிஹாரமில்லாமல் அங்கு இரண்டு பயில்வான்கள் கத்திப் போர் செய்து கொண்டிருந்தனர். போர் வெகு ஜீமூதமாக நடக்கிறது. அந்த இடத்தில் பெரிய கும்பல் கலையாமல், அத்தனை பேரும் சித்திரப் பதுமைகள் போலே அசையாமல் மேற்படி பயில்வான்களின் சண்டையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.