பறந்து பறந்து கடலுக்கருகே வந்து சேர்ந்தோம். நெருங்கி வரவே, உள்ளுயிரிலே புகுந்து இனிய சலனங்கள் தருவதும், காரமில்லாத தழதழத்த இயற்கையுடையதுமான மனோஹரத்தன்மை கொண்டதோர் ஸுகந்தம் புலப்பட்டது. குமாரி சொல்லியிருந்த ஸுகந்த மாளிகை ஸமீபித்து விட்டதென்பதை அறிந்து கொண்டேன். "இம் மாளிகைக்கு இத்தனை இனிய சுகம் எப்படி ஏற்பட்டது?" என்று நான் கேட்க வாயெடுக்கு முன்பாகவே அவள், எனது உள்ளக் கருத்தைத் தெரிந்து கொண்டு பின்வருமாறு கூறலாயினள்:- "கஸ்தூரிக் கற்களாலும், தேவ சந்தன மரத்தாலும் இம்மாளிகை ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இதைச் சூழ்ந்துள்ள பூங்காவனத்திலே உங்கள் உலகத்தில் கண்டறியாத அதிக கந்தமுடைய பலவித மலர்ச்செடிகள் இருக்கின்றன" என்றாள். |