இங்ஙனம் பேசிக்கொண்டே, சுகந்த மாளிகையின் உச்சிமேடையில் போயிறங்கினோம். எங்களைப் போலவே இணையிணையாகப் பலர் அங்கே வந்திருந்து கடற்காட்சியை நோக்கிக் களித்துக் கொண்டிருப்பது கண்டேன். ஓர் ஓரத்திலே போடப்பட்டிருந்த இரண்டு ஆசனங்களில் போய் சிரம பரிகாரமாகச் சாய்ந்து கொண்டோம். அவ்வாஸனங்கள் இலவம் பஞ்சுபோன்ற யாதோ ஒரு பொருள் பொதிந்தனவாய், வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சாய்ந்தவுடனே, தாயின் மடியிலே சாய்ந்ததுபோல உள்ளத்திற்கு ஆறுதல் உண்டாயிற்று. எதிரே கடல், சந்திர கிரணங்களால் ஜோதியுயிர் கொடுக்கப் பெற்ற அலைகள். வெள்ளை மலர்கள் புனைந்து, புஷ்பக்குன்றுகள் கிடப்பது போலத் தோன்றிய கப்பல்கள். தூரத்திலே, அன்னங்கள் மிதப்பதுபோல மிதந்த இன்பப் படகுகள். மேலே, சந்திரன், வெள்ளி மேகங்கள்; இம் மேகங்களிலே சில வலைகள் பரப்பி யிருப்பதுபோலத் தோன்றும்; சில அலைகளடிப்பது போலிருக்கும்; ஒன்று பூச் சிதறியதுபோலத் தோன்றும்; கீழே மிதக்கும் படகுகளுக்கு வானக்கண்ணாடியிலே தோன்றும் சாயைகள் போலச் சில மிதந்து செல்லும். இனி, நக்ஷத்திரங்கள்! வானக் கடலிலே வெடித்தெழுந்த வயிரங்கள்! சிதறுண்ட இன்பங்கள்! வானப் பொய்கையிலே மனமெனும் சிறிய வண்டுபோல் ஒளித் தேன் குடிப்பதற்கமைந்த எண்ணில்லாத மலர்கள்! திசையென்ற அநந்த வஸ்துவுடன், ஈசனறிவு என்ற அநந்த வஸ்து தாக்கியபோது பொறித்தெழுந்த சுடர்ப் பொறிகள். படகுகளிலே இணையிணையாக கந்தர்வ இளைஞர்களும் பெண்களும், சிலர் பாட்டிலும், சிலர் ஆட்டத்திலும், சிலர் வாத்தியங்கள் வாசிப்பதிலும், களிப்பவராகி அலை முழக்கமாகிய பிராகிருத பேரிகைக்கு இவர்கள் பலவிதங்களிலே அனுமோதஞ் செய்வாராயினர். சந்திர கிரணங்களும் இவற்றிடையே மாறாப் புதுமை கொண்ட பொன் வண்டொலியிசைத்துக் கொண்டிருந்தன. கடற்காற்றோ, பர்வதகுமாரியின் நெற்றிமீதுள்ள குழற் சுருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. |