பக்கம் எண் :

கடற்கரை

ஆ! உருவம் காந்தர்வமாக மாறிவிட்ட போதிலும், எனது ஜீவன் மானிட ஜீவனாதலால் இத்தனை இன்ப மிகுதியை என்னால் பொறுக்க முடியவில்லை. புலன்கள் திகைத்துப் போய் விட்டன. அறிவு மயங்கிவிட்டது. இன்பமாகிய கடலின் அலைகளிலே எனதுயிர் சிறிய நுரைபோல எற்றுண்பதாயிற்று. இன்பமாகிய புயற்காற்றிலே எனதுயிர் சிறு துரும்புபோலச் சுழல்வதாயிற்று. என்ன சுகந்தம்! என்ன இசை! என்ன காட்சி! பர்வதகுமாரியுடன் நான் ஏதேதோ, தொடர்பற்ற மொழிகள் பேசுவேனாயினேன். இன்பங்கள் அறிவினை அமிழ்த்தி விடவே, நா, கடிவாள மிழந்த காட்டுக் குதிரை போல, கண்ட கண்ட இடங்களில் சஞ்சரிப்பதாயிற்று. இன்பம் தெவிட்டிப் போய்விட்ட தென்று நான் சொல்லவில்லை. நான் போக்தா (அனுபவிப்பவன்) ஆக இருந்தது போய், அது போக்தாவாகி என்னை விழுங்கித் தீர்த்து விட்டது. பேசிக் கொண்டிருந்தபடியே கண்ணயர்ந்து விட்டேன்.

சில பொழுது கழிந்ததின் பிறகு, விழிப்படைந்தேன். சூரியோதய காலம். கடலும் வானும் கூடித் தழுவிய இடத்தில், அவற்றின் கூட்டத்திலே தோன்றிய ஜோதிக் குழந்தை போலப் பரிதி வட்டம் பிறந்தது; கிழக்குத் திசையில் வானமெங்கும் நெருப்புக் குழம்பு பறந்திருந்தது. தீப்பட்டெரியும் தீவுகள் போல மேகங்கள் காணப்பட்டன. மேகங்களுக்கு மனித புத்தி யுண்டென்று நினைக்கிறேன். தமது இருளியற்கையை மாற்றித் தம்மை ஒளியுடையனவாகச் செய்யும் சூரியனை இவைகள் அமுக்கிக் கொன்றுவிடப் போகின்றன.