பக்கம் எண் :

கடற்கரை

"பரஸ்பரம் அன்போடு வாழுங்கள்" - "அன்பே சிவம்" - என்ற பெருந் தர்மத்தைக் கூறி யூத ஜாதியாரை ஒளிபெறச் செய்ய வேண்டுமென்று நாடிய கிறிஸ்து முனியை - தான் பிறந்ததால் யூத ஜாதிக்கே ஓர் புகழும் மாண்புங் கொடுத்த கிறிஸ்து முனியை யூத ஜாதியார் பகைத்துக் கொல்லவில்லையா? அதாவது, கொல்ல முயன்றார்கள்; அவர்களால் கொல்ல முடியவில்லை. கிறிஸ்து முனி இன்று வரை உயிரோடிருக்கிறார். தர்மத்தின் பொருட்டாகவும், மக்கள் மீதுள்ள அன்பின் பொருட்டாகவும், உலகத்தாரின் தூற்றுதல், உலகத்தார் செய்யும் நிஷ்டூரம் என்ற சிலுவையில் ஏற்றுண்டு வருந்தும் ஒவ்வொரு மனிதனிடத்தேயும் கிறிஸ்துவே விளங்குகின்றார்.

எனக்கு அந்த மேகங்களைப் பார்க்கும்போது பாரிசேயர்கள் முதலிய யூதக் குருக்களின் நினைப்பு வந்தது. க்ஷணப்பொழுது. பின்பு அந்த ஜோதிக் கோளம் மேலெழுவதாயிற்று. வஜ்ராயுதங்கள் போலத் தோன்றிய தனது கிரணங்களால் அம் மேகங்களை உடைத்துச் சிதறி, எற்றி, அசைத்துக் குழப்பிப் புரட்டி ஓட்டித் தொலைத்துவிட்டு, பால சூரியன், மிகுந்த வெற்றிக் கோலத்துடன் கிரணங்களை உலக முழுவதிலும் பரப்பி. விடுதலை பெற்ற ஓர் பேருண்மை போல ஒளி வீசுவானாயினன். உலகம் மகிழ்ச்சி பெற்றது. கந்தர்வ மாதர்களெல்லாம் பூபாள ராகத்தில் காயத்ரி பாடித் துதித்தார்கள்.