பக்கம் எண் :

ஞானரதம் - அருவி

"அருவிக்கு வா. எழுந்திரு, நீராடப் போவோம்" என்றனள், எனது உயிர்ப் படகிற்கு மீகாமனாக வந்து முளைத்த இளையவள்.

அருவிக் கரைக்கு வந்துசேர்ந்தோம். அருவி உயர்ந்த குன்றுத் தலையிலிருந்து இரண்டு படிகளாக இடை நிலத்திலுள்ள பொய்கையில் வீழ்ந்து, அங்கிருந்து மறுபடி தரையில் விழுகின்றது. நீரருவிக்குப் பல புலவர்கள் மாலை முதலியவற்றை உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு சம்மதமில்லை. வானும், கடலும், இராமாயணமும் தமக்குத் தாமே நிகர் என்று பெரியோர் சொல்லி யிருப்பதுபோலவே, அருவியையும் உவமையற்றதாகக் கொள்ள வேண்டும். நாங்கள் வருவதற்கு முன்னாகவே அங்கு பலர் வந்து ஸ்நானம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஸ்நானம் செய்த வினோதங்களைப் பார்க்கும்போது அற்புதமாயிருந்தது. இப்பொழுது, மண்ணுலகத்திலிருந்து திரும்ப எழுதும்போது, உள்ளபடி யெழுதச் சிறிது கூசுகின்றது. மண்ணுலகத்திலே சிலர் எழுத்திலும் பேச்சிலும் மகா சுத்தர்கள். நினைப்பிலும், நடையிலும் - " கீழே விழுந்த அருவி சிறிய ஆறாக ஓடுகின்றது. அந்த ஆற்றில் வழியெங்கும் சிறு சிறு பாறைகள். ஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொர் இணை பார்க்கலாம். பாறை மீதிருந்து சிவ்வென்று பறந்து வந்து அருவியை வலம் செய்து இடையே நின்றுகொண்டிருந்து விட்டு மறுபடி தத்தம் பாறைக்குப் போய் விடுவார்கள். தூய நெஞ்சுடையவர்களுக்கு எல்லா விஷயங்களும் தூய்மை கொண்டனவாகவே தோன்றும். கந்தர்வ நாட்டில் எவர் மனத்திலும் விகற்பம் கிடையாது. ஆகையால் ஆடை முதலிய விஷயங்களில் அவர்கள் அதிக நாணம் பாராட்டுவதில்லை. ஆ! என்ன சௌந்தர்யம்!

அருவியில் ஸ்நானம் செய்து முடிந்தபிறகு பக்கத்திலுள்ள ஓர் ஆலயத்திற் சென்று அநேகர் தத்தம் இஷ்ட தெய்வங்களுக்குப் பலவகைகளிலே பூஜை புரிந்தார்கள். சித்திர வித்தையிலே, ஒப்பற்று விளங்கும் கந்தர்வ நாட்டார் தமது கோயில்களிலே யாதொரு பிரதிமைகளும் இல்லாதனவாகச் சில கோயில்கள் வைத்திருக்கிறார்கள். அக் கோயில்களின் சிகரத்திலே 'ஓம்' என்று ஒளியெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உற்சாகக் கொண்டாட்டங்களும், வேடிக்கைகளும் பிரதானமாகக் கொண்ட ஆலயங்களிலேதான் பிரதிமைகள் வைத்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக ஆத்மசுத்தி தேட விரும்பும் இடங்களில் பிரதிமைகள்