வைப்பதில்லை. அவரவர்கள் தத்தம் இஷ்ட தெய்வங்களைத் தியான ரூபமாக வணங்குகின்றார்கள். "போகத்திற்கும் யோகத்திற்கும் சம்பந்தமுண்டு. கந்தர்வலோகத்திலிருந்து சாந்திலோகம் வெகு சமீபம்" என்று குமாரி சொல்லியதின் பொருள் எனக்குச் சிறிது சிறிதாக விளங்குவதாயிற்று. சௌந்தரியத்தைத் தாகத்துடன் தேடுவோர்களுக்கு சத்தியமும் அகப்பட்டுவிடும். "உண்மையே வனப்பு, வனப்பே உண்மை" என்று ஓர் ஞானி சொல்லியிருக்கிறார். ஆலயத்துக்குள்ளே நானும் குமாரியும் பிரவேசித்தோம். "குமாரி! இஷ்ட தேவதா பூஜைக்குரியது இவ்வாலயம் என்கிறாய். உனக்கு இஷ்ட தெய்வம் எது? நீ எதை வணங்கப் போகிறாய்?" என்று கேட்டேன். குமாரி "எனக்கு இஷ்ட தெய்வம் மதனன். நான் அவனைத் தியானம் செய்வேன், நீ உனக்கு விருப்பமான தெய்வத்தை வரித்துக் கொள்" என்றாள். "எனக்கு இஷ்ட தெய்வம் நீயே. நான் உன்னையே தியானம் செய்யப் போகிறேன்" என்று நான் சொன்னேன். "நன்று! நன்று!" என்று கூறிச் சிரித்தாள். பிறகு "தோழா, மனங்கொண்டது தெய்வம். நீ எந்த வடிவத்திலே தெய்வத்தை வணங்குகிறாயோ, தெய்வம் உனக்கு அந்த வடிவமாக வந்து அருள் செய்கின்றது. தெய்வமென்பது யாது? தெய்வமென்பது ஆதர்சம்; தெய்வமென்பது சித்த லக்ஷ்யம். தெய்வமென்பது உண்மை. தெய்வமென்பது வனப்பு" என்றாள். ஆம். "உலகத்திலே மனிதனாகப் பிறந்தால் இராமனைப் போல ஒழுகவேண்டும். அதிற் சிறந்தது வேறெதுமில்லை" என்று சொல்பவனுக்கு இராமன் தெய்வம். தன்னை மறந்து, தன தின்பம் கருதாமல், சௌந்தரிய வெள்ளத்திலே தனது உயிரை யிழந்து பர்வதகுமாரியை நான் தெய்வமாகக் கொள்ளும் பக்ஷத்தில் எனக்கு அதுவே மோக்ஷ ஸாதனம். காளிதாஸன் தாஸி வீட்டில் செய்த பூஜையைப் பற்றி நம்மவர் சொல்லும் பொய்க் கதையிலே கூட உண்மையிருக்கின்றது. |