பர்வதகுமாரி, ஆலயத்துள்ளே ஓர் தனியிடத்தில், கீழ்த்திசை நோக்கிப் பத்மாஸனமிட்டு உட்கார்ந்து கொண்டு கண்ணிலே பரவச வெறி மிதக்க, "ஓம் நம: ப்ரம்மணே" என்று சொல்லிச் சொல்லி ஜபித்தாள். நானும் - விளையாட்டன்று, யதார்த்தமாகவே - அவளெதிரில் பத்மாஸனத்திலிருந்து கொண்டு, திரிகரணங்களையும் அவள்மீது செலுத்தி, "ஓம் நம: குமாரியை" என்று யோகத்திலே அமர்ந்து விட்டேன். யோகந் தெளிந்து எழுந்து நின்றோம். பர்வதகுமாரி 'புறப்படு' என்று சைகை காட்டினாள். காலை ஞாயிற்றின் பால கிரணங்களை தாகந் தீரக் குடித்துக்கொண்டு பறக்கலாயினோம். பறந்து, சித்திர சாலைக்கு வந்து சேர்ந்தோம். ஆகா! எத்தனை பெரிய முயற்சியிலே தலையிட்டு விட்டேன்! சாதாரணமாகக் கல்கத்தாவிலுள்ள காட்சிச்சாலையை வர்ணிக்க வேண்டுமென்றால், அதற்கென்று ஓர் நூல் எழுத வேண்டும். கந்தர்வ லோகத்துச் சித்திரசாலையிலுள்ள காட்சிகளை நான் எப்படி எழுதிக் காட்டுவது? "சித்திரசாலைக்குப் போவோம், வா. நேற்றெல்லாம் இயற்கை நலம் பார்த்தாய் விட்டது. இன்று காலை அருவி பார்த்தோம். இனி உங்கள் நாட்டுச் செயற்கை நலங்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டாகிறது. இந்த வானமோ மிகப் பெரியது, அதி சுந்தரமானது. அதோ தூரத்திலே தெரியும் குன்றும் அதன் முடியிலே வானமும் சேர்ந்து நிற்குமிடத்தில், எத்தனை அழகாயிருக்கிறது பார்? ஓகோ! - இதையெல்லாம் நின்று பார்த்துக் கொண்டேயிருந்தால், இப்படியே பொழுது போய்விடும். சித்திர சாலைக்குப் போகலாம்" என்றேன். பர்வதகுமாரி கல்லென்று நகைத்தாள். அவள் விழிக்கடைகளிலே குறும்புக் குணம் தோன்றியது. |